garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பரிபாடல் --> பரிபாடல் திரட்டு
                                     
திருமால்
கீரந்தையார்

1 - 6 இருந்தையூர்ச் செல்வன்
வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமைய மலையின் இழிதந்து,
நான்மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய,
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் 5
திருந்தடி தலையுறப் பரவுதும், தொழுது. (இது தரவு)

7 - 17 இருந்தையூர்ப் புனைவு
ஒருசார், அணிமலர் வேங்கை, மராஅம், மகிழம்,
பிணிநெகிழ் பிண்டி, நிவந்துசேர்பு ஓங்கி,
மணிநிறம் கொண்ட மலை;
ஒருசார், தண்ணருந் தாமரைப் பூவின் இடையிடை 10
வண்ண வரிஇதழ்ப் போதின்வாய் வண்டுஆர்ப்ப,
விண்வீற் றிருக்கும் கயமீன் விரிதகையின்
கண்வீற் றிருக்கும் கயம்;
ஒருசார், சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுற்று
உழவின் ஓதை பயின்று,அறி விழந்து 15
திரிநரும் ஆர்த்து, நடுநரும் ஈண்டித்
திருநயத் தக்க வயல்;

18 - 29 நகர மக்கள்
ஒருசார், அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி,
விறற்புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி 20
அறத்தின் திரியா பதி; (இவை நான்கும் கொச்சகம்)
ஆங்கொருசார், உண்ணுவ, பூசுவ, பூண்ப உடுப்பவை,
மண்ணுவ, மணிபொன் மலைய, கடல,
பண்ணிய மாசறு பயந்தரு காருகப்
புண்ணிய வணிகர் புனைமறுகு ஒருசார் 25
விளைவதை வினைஎவன் மென்புல, வன்புலக்
களமர் உழவர் கடிமறுகு பிறசார்;
ஆங்க, அனையவை நல்ல நனிகூடும் இன்பம்
இயல்கொள நண்ணி யவை; (இது கொண்டு நிலை)

30 - 49 பல்வகை மக்கள் ஆதிசேடனை வழிபடுதல்
வண்டு பொரேரென எழ,
வண்டு பொரேரென எழும்; 30
கடிப்புகு வேரிக் கதவமில் தோட்டிக்
கடிப்பிகு காதில் கனங்குழை தொடர,
மிளிர்மின் வாய்ந்த விளங்குஒளி நுதலார்
ஊர்களிற் றன்ன செம்ம லோரும் 35
வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத்து
ஒளியிழை ஒதுங்கிய ஒள்நுத லோரும்
புலத்தோடு அளவிய புகழ்அணிந் தோரும்
நலத்தோடு அளவிய நாண் அணிந் தோரும்
40 விடையோடு இகலிய விறல்நடை யோரும்
நடைமடம் மேவிய நாண்அணிந் தோரும்
கடல்நிரை திரையின் கருநரை யோரும்
சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரும்
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி
45 இடையொழிவு இன்றி அடியுறையார் ஈண்டி,
விளைந்தார் வினையின் விழுப்பயன் துய்க்கும்
துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும்;
இருகேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரைகெழு செல்வன் நகர்;

50 - 59 கோயிலின் ஒலிகள்
வண்டொடு தும்பியும் வண்தொடையாழ்ஆர்ப்ப, 50
விண்ட கடகரி மேகமொடு அதிரத்,
தண்டா அருவியொடு இருமுழவு ஆர்ப்ப,
அரியுண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்றச்,
சூடு நறவொடு காம மகிழ்விரியச், 55
சூடா நறவொடு காமம் விரும்ப
இனைய பிறவும் இவைபோல் வனவும்
அனையவை எல்லாம் இயையும் புனையிழைப்
பூமுடி நாகர் நகர். (இவையும் கொச்சகம்)

60 - 63 ஆதிசேடனை வழிபடுதலால் வரும் பயன்
மணிமருள் தகைவகை நெறிசெறி ஒலிபொலி 60
அவிர்நிமிர் புகழ்கூந்தல்,
பிணிநெகிழ் துளையினை தெளியொளி திகழ்ஞெகிழ்,
தெரியரி மதுமகிழ் பரிமலர்
மகிழ்உண்கண், வாள்நுதலோர்,
மணிமயில் தொழில் எழிலி கலிமலி திகழவிழ
திகழ்கடுங் கடாக்களிற்று அண்ண லவரோடு
அணிமிக வந்திறைஞ்ச, அல்இகப்பப் பிணிநீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்; தொல்சீர்
வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக்
குளவாய் அமர்ந்தான் நகர். (இது முடுகியல்)

64 - 78 ஆதிசேடனின் பெருமை
திகழ்ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்புஎழ வாங்கித்தம் சீர்ச்சிரத்து ஏற்றி, 65
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்,
புகழ்சால் சிறப்பின் இருதிறத் தோர்க்கும்
அமுது கடைய, இருவயின் நாணாகி,
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க,
உகாஅ வலியின் ஒருதோழம் காலம் 70
அறா அது அணிந்தாரும் தாம்;
மிகாஅ மறலிய மேவலி எல்லாம்
புகாஅஎதிர் பூண்டாரும் தாம்;
மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம்
அணிபோற் பொறுத்தாரும் தாஅம்; பணிவில்சீர்ச் 75
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் தந்தாரும் தாம். (இவையும் கொச்சகம்)

79 - 82 வரம் வேண்டுதல்
அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,
நல்லடி ஏத்திநிற் பரவுதும்;
எல்லேம் பிரியற்கஎம் சுற்றமொடு ஒருங்கே.(இது ஆசிரியச் கரிதகம்)

(இப்பாடல் தொல்காப்பியம் செய்யுளில், 121 பேராசிரியர், நச்சினார்க்கினியார் உரைகளில் கண்டது).

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com