garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> ஆறாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
ஆறாம் பத்து
ஆசிரியர் : காக்கை பாடினியார் நச்செள்ளையார்
51. வடு அடு நுண் அயிர்

துளங்குநீர் வியல்அகம் கலங்கக் கால்பொர
விளங்குஇரும் புணரி உரும்என முழங்கும்
கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்
கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவியிணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் -- 5
வண்டுஇறை கொண்ட தண்கடல் பரப்பின்
அடும்புஅமல் அடைகரை அலவன் ஆடிய
வடுஅடு நுண் அயிர் ஊதை உஞற்றும்
தூஇரும் போந்தைப் பொழில் அணிப் பொலிதந்து
இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் -- 10
வெறிஉறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
அரவழங்கும் பெருந்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பௌவத்துக்
குணகுட கடலோடு ஆயிடை மணந்த -- 15
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனைஉறு நறவின் நாடுடன் கமழச்
சுடர்நுதல் மடநோக்கின்
வாள்நகை இலங்குஎயிற்று -- 20
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்என
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே;
மழைதவழும் பெரும்குன்றத்துச் -- 25
செயிருடைய அரவுஎறிந்து
கடும்சினத்த மிடல்தபுக்கும்
பெருஞ்சினப்புயல் ஏறுஅனையை
தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் -- 30
மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்துஊறு அளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க
மாற்றரும் சீற்றத்து மாஇரும் கூற்றம் -- 35
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவத் தானே.

துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம் சொற்சீர் வண்ணமும்
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்
பெயர் - வடுஅடு நுண் அயிர்

52. சிறு செங்குவளை

கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு,
மைஅணிந்து எழுதரும் மாஇரும் பல்தோல் -- 5
மெய்புதை அரணம் எண்ணாது எஃகுசுமந்து
முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட
நல்அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கை -- 10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்புஅறி யாஎனக் கேட்டிகும், இனியே
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ -- 15
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல்அம் தித்தி
ஈர்இதழ் மழைக்கண் பேரியல் அரிவை
ஒள்இதழ் அவிழ்அகம் கடுக்கும் சீறடிப்
பல்சில கிண்கிணி சிறுபரடு அலைப்பக் -- 20
கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்றுநின்
எறியர் ஓக்கிய சிறுசெங் குவளை
ஈஎன இரப்பவும் ஒல்லாள், நீஎமக்கு
யாரை யோஎனப் பெயர்வோள் கையதை
கதும்என உருத்த நோக்கமோடு அதுநீ -- 25
பாஅல் வல்லாய் ஆயினை; பாஅல்
யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி,
அகல்இரு விசும்பில் பகலிடம் தரீஇயர்
தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று
உருபுகிளர் வண்ணம் கொண்ட -- 30
வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே.

துறை - குரவைநிலை
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - சிறு செங்குவளை

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com