garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> எட்டாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
எட்டாம் பத்து
ஆசிரியர்: அரிசில் கிழார்
71. குறுந்தாள் ஞாயில்

அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப் பகடு உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக் -- 5
கடுந்தேறு உறுதிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்
அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே;
ஊர்எரி கவர உருத்துஎழுந்து உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப -- 10
மதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்
ஆரெயில் தோட்டி வௌவினை ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப -- 15
மத்துக்கயிறு ஆடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபாழ் ஆக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென
அருஞ்சமத்து அருநிலை தாங்கிய புகர்நுதல் -- 20
பெருங்களிற்று யானையொடு அருங்கலம் தராஅர்
மெய்பனி கூரா அணங்கெனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி, வாழ்கநின் ஊழி,
உரவரும் மடவரும் அறிவுதெரிந்து எண்ணி -- 25
அறிந்தனை அருளா யாயின்,
யார்இவண் நெடுந்தகை வாழு மோரே?

துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - குறுந்தாள் ஞாயில்

72. உருத்து எழு வெள்ளம்

இகல்பெரு மையின் படைகோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறிதுடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடு, நின்
முன்திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவுவலி யுறுத்தும் -- 5
நன்றுஅறி உள்ளத்துச் சான்றோர் அன்னநின்
பண்புநன்கு அறியார் மடம்பெரு மையின்,
துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை ஒராஅநீர் ஞெமரவந்து ஈண்டி
உரவுத்திரை கடுகிய உருத்துஎழு வெள்ளம் -- 10
வரையா மாதிரத்து இருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்து
அம்சாறு புரையும் நின்தொழில் ஒழித்துப்
பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை -- 15
சினம்கெழு குருசில் நின் உடற்றிசி னோர்க்கே.

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - உருத்து எழு வெள்ளம்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com