garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> ஒன்பதாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
ஒன்பதாம் பத்து
ஆசிரியர்: பெருங்குன்றூர் கிழார்
81. நிழல் விடு கட்டி

உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்
அகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்புஅடையூ நிவந்து
காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக், -- 5
களிறுபாய்ந்து இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப,
அரசுபுறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் -- 10
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்இசைத் தம்குடி நிறுமார்
இடாஅ ஏணி வியல்அறைக் கொட்ப,
நாடுஅடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி -- 15
அழல்வினை அமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் தானை உதவி
வேறுபுலத்து இறுத்த வெல்போர் அண்ணல்;
முழவின் அமைந்த பெரும்பழம் மிசைந்து
சாறுஅயர்ந் தன்ன கார்அணி யாணர்த் -- 20
தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து -- 25
மின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்
தன்நிறம் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்குஈர் ஓதி ஒண்ணுதல் அணிகொளக்,
கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கின் நயம்வரப்
பெருந்தகைக்கு அமர்ந்த மென்சொல் திருமுகத்து -- 30
மாணிழை அரிவை காணிய ஒருநாள்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்;
முனைகை விட்டு முன்நிலைச் செல்லாது
தூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடு
தொன்மருங்கு அறுத்தல் அஞ்சி அரண்கொண்டு -- 35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக,
விருந்தும் ஆக நின்பெரும் தோட்கே.

துறை - முல்லை
வண்ணம் - ஒழுகு வண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - நிழல் விடு கட்டி

82. வினை நவில் யானை

பகைபெரு மையின் தெய்வம் செப்ப
ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமம் தொலைத்த வினைநவில் யானை
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி -- 5
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்து இயல,
மறவர் மறல மாப்படை உறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
இன்ன வைகல் பன்னாள் ஆகப் -- 10
பாடிக் காண்கு வந்திசின் பெரும,
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்றுபுகழ்ந்து அசையா நல்லிசை -- 15
நிலம்தரு திருவின் நெடியோய், நின்னே.

துறை - - காட்சி வாழ்த்து
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - வினை நவில் யானை

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com