garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து
பதிற்றுப்பத்து

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தும் ஒன்றாகும். இந்நூல் நூறு பாடல்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் பத்துப் பாடல்கள் வீதம் பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதற்பத்தும் – பத்தாம்பத்தும் இன்றுவரை கிடைக்கவில்லை. ஏனைய சங்கஇலக்கிய நூல்களைவிட பதிற்றுப்பத்துக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்நூல் முழுவதும் சேரமன்னர் புகழைப் பற்றி பேசுவதாகவே அமையப்பெற்றுள்ளது. ஒவ்வொரு சேரமன்னர்களைப் பற்றியும் பத்து பாடல்கள்வீதம் பத்துச் சேரமன்னர்களைப் பற்றி வெவ்வேறு புலவர்கள் பாடியிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு பத்துபாடல்களின் இறுதியிலும் பதிகம் அமைந்துள்ளது. அதில் பத்துச் செய்யுட்களின் பெயர், பாடிய புலவர், பெற்ற பரிசில், அரசர் பெயர், அவர் ஆட்சிசெய்த ஆண்டுகள் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கடைச்சங்கப் புலவர்களான கபிலர், பரணர் முதலியோர் இந்நூலில் பாடியிருந்தமையால் இதற்குக் கடைச் சங்கநூல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்நூலுக்கு பண்டைத் தமிழர் சேர இலக்கியம் என்னும் பெருமையும் உண்டு.

கடவுள் வாழ்த்து

பதிற்றுப்பத்தில் கடவுள் வாழ்த்துப் பாடல் உண்டு என்று உறுதியாக கூற இயலவில்லை. 'எரிஎள்ளுவன்ன' எனத்தொடங்கும் பாடலை இந்நூலின் கடவுள்வாழ்த்து பாடலாகக் கொண்டு நூலின் தொடக்கப் பகுதியில் உரையோடு சிலர் வெளியிட்டுள்ளனர். அதையே நாமும் பின்பற்றி இங்கு குறிப்பிட்டு அளித்துள்ளோம்.

ஏரிஎள்ளு அன்ன நிறத்தன், விரிஇணர்க்
கொன்றைஅம் பைந்தார் அகலத்தன், பொன்றார்
எயில்எரி ஊட்டிய வில்லன், பயில்இருள்
காடுஅமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன், குறங்குஅறைந்து -- 5
வெண்மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவாய்
ஈர்அணி பெற்ற எழில்தகையன், ஏரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறுஏற்கும் பண்பின், மறுமிடற்றன், தேறிய -- 10
சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட்கு உயர்கமா வலனே!

(திணை – பாடாண்டிணை துறை - கடவுள் வாழ்த்து
வண்ணம் - ஒழுகு வண்ணம் தூக்கு - செந்தூக்கு)

இருங்கண் யானையோடு அருங்கலம் துறுத்துப்
பணிந்துவழி மொழிதல் அல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே
உரும்உடன்று சிலைத்தலின் விசும்புஅதிர்ந் தாங்குக்
கண்அதிர்பு முழங்கும் கடுங்குரல் முரசமொடு -- 5
கால்கிளர்ந்து அன்ன ஊர்திக் கான்முளை
எரிநிகழ்ந்து அன்ன நிறைஅரும் சீற்றத்து
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
நீர்துனைந்து அன்ன செலவின்
நிலம்திரைப்பு அன்ன தானையோய் நினக்கே -- 10

இலங்குதொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எரிஅவிழ்ந்து அன்ன விரிஉளை சூட்டிக்
கால்கிளர்ந்து அன்ன கடுஞ்செலல் இவுளி
கோல்முனைக் கொடிஇனம் விரவா வல்லோடு -- 5
ஊன்வினை கடுக்கும் தோன்றல பெரிதுஎழுந்து
அருவியின் ஒலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசம் கண்உற்றுக்
கதித்துஎழு மாதிரம் கல்லென ஒலிப்பக்
கறங்குஇசை வயிரொடு வலம்புரி ஆர்ப்ப -- 10
நெடுமதில் நிரைஞாயில்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சுபுகல் அழிந்து நிலைதளர்பு ஒரீஇ
ஒல்லா மன்னர் நடுங்க -- 15
நல்ல மன்றஇவண் வீங்கிய செலவே.

பேணுதகு சிறப்பின் பெண்ணியல்பு ஆயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர்த் தான்அறி குநளே

வந்தனென் பெரும, கண்டனென் செலற்கே,
களிறு கலிமான் தேரொடு சுரந்து
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை;
மாரி என்னாய், பனியென மடியாய்;
பகைவெம் மையின் நசையா ஊக்கலை; -- 5
வேறுபுலத்து இறுத்த விறல்வெம் தானையொடு
மாறா மைந்தர் மாறுநிலை தேய
மைந்துமலி ஊக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணிநின் பாசறை யானே. -- 10

பதிற்றுபத்து பாடல்கள் பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் முதல் மற்றும் பத்தாம் பகுதி பாடல்கள் கிடைக்கவில்லை, ஒவ்வொரு பத்து பாடல்களுக்கும் பதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்பத்து பாடல்கள் - கிடைக்கபெற வில்லை

இரண்டாம்பத்து பாடல்கள் - ஆசிரியர்: குமட்டூர்க் கண்ணனார்

மூன்றாம்பத்து பாடல்கள் - ஆசிரியர்: பாலைக் கௌதமனார்

நான்காம்பத்து பாடல்கள் - ஆசிரியர்: காப்பியாற்றுக் காப்பியனார்

ஐந்தாம்பத்து பாடல்கள் - ஆசிரியர் : பரணர்

ஆறாம்பத்து பாடல்கள் - ஆசிரியர் : காக்கை பாடினியார் நச்செள்ளையார்

ஏழாம்பத்து பாடல்கள் - ஆசிரியர்: கபிலர்

எட்டாம்பத்து பாடல்கள் - ஆசிரியர்: அரிசில் கிழார்

ஒன்பதாம்பத்து பாடல்கள் - ஆசிரியர்: பெருங்குன்றூர் கிழார்

பத்தாம்பத்து பாடல்கள் - கிடைக்கபெற வில்லை

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com