garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
79. தலைவன் கூற்று

தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி, வினைப்படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில்
பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகி, கொங்கர் (5)
படுமணி ஆயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள்
அகல்இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப
வல்லாங்கு வருதும் என்னாது, அல்குவர (10)
வருந்தினை வாழி, என் நெஞ்சே இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
கொடுவில் எயினர் கோட்சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள்இடைக் (15)
கல்பிறங்கு அத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே.

திணை - பாலை
இயற்றியவர் - குடவாயிற் கீரத்தனார்.

80. தோழி கூற்று

கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம்நீந்தி, இரவின்
வந்தோய் மன்ற தண்கடல் சேர்ப்ப
நினக்குஎவன் அரியமோ, யாமே? எந்தை
புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த (5)
பல்மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண்பல் மலர, கவட்டுஇலை அடும்பின்
செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப
இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ (10)
மின்இலைப் பொலிந்த விளங்குஇணர் அவிழ்பொன்
தண்நறும் பைந்தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல்வந் தீமே.

திணை - நெய்தல்
இயற்றியவர் - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com