garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
53. ஈன்ற போதிலும் பெரிது உவந்தனள்
(பாடல் எண் – 278)

நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலை அறுத் திடுவென், யான் எனச் சினை இக்(5)
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந் தனளே!

திணை - தும்பை
துறை – உவகைக் கலுழ்ச்சி

இயற்றியவர் - புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

55. நீடு விளங்கும் புகழ்
(பாடல் எண் – 359)

பாறு படப் பறைந்த பன்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு,
பிணம்தின் குறுநரி நிணம் திகழ் பல்ல,
பே எய் மகளிர் பிணம் தழுஉப் பற்றி,
விளர் ஊன் தின்ற வெம்புலால் மெய்யர் (5)
களரி மருங்கில் கால் பெயர்த்து ஆடி,
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு முன் னினரே, நாடு கொண் டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே!
வசையும் நிற்கும்! இசையும் நிற்கும்! (10)
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும்,
நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவு கோட்டுப் பல களிற்றொடு,
பொலம் படைய மா மயங்கிட,
இழைகிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது (15)
கொள் என விடுவை ஆயின், வெள்ளென
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே!

திணை - காஞ்சி
துறை – பெருங் காஞ்சி

இயற்றியவர் - புலவர் காவட்டனார்
அரசர் - அந்துவன் கீரன்

54. நிலவும் கதிரும் போல மன்னுக!
(பாடல் எண் – 6)

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் (5)
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! (10)
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் (15)
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை, நின் குடையே! முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின்சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (20)
வாடுக, இறைவ! நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!
செலிஇயர் அத்தை, நின்வெகுளி, வாலிழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய (25)
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம். போலவும், தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னுக பெரும நீ நிலமிசை யானே!

திணை - பாடாண்
துறை – செவியறிவுறூஉ; வாழ்த்தியல்,

இயற்றியவர் - புலவர் காரிகிழார்
அரசர் - பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com